writerpara

Home
My works
Awards
Contact Me
Photos

para.jpg
Pa. Raghavan

பூர்வீகம், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருமணஞ்சேரி என்பார்கள். ஆனால், பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். 1971ம் வருடம் அக்டோபர் 8ம் தேதி, அடையாறு ஆந்திர மகிள சபாவில் - தலையில் கத்தி காயத்துடன் சிசேரியன் சுபஜனனம்.
 
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் என்ற சிற்றூரில் பள்ளிக்கல்வி முடித்தேன். பின்னர் சென்னையை அடுத்த குரோம்பேட்டைக்குக் குடிமாறி வந்து பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுதினேன். பிறகு தரமணி மத்தியத் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் படிப்பு.
 
மூன்று வருடக் கல்லூரிப் படிப்பை முறித்துக்கொண்டு, எழுத்தார்வத்தால் பத்திரிகைத் துறையின்மீது கவனம் செலுத்தினேன்.
 
1988ம் ஆண்டு அமுதசுரபியில் முதல் முதலில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தேன். பிறகு காமகோடி, தாய் என்று மாறி, 1992 டிசம்பர் 6ம் தேதி - அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை - முதல்முதலாகக் கல்கியில் எனக்கான கதவைத் திறந்துகொண்டேன்.
 
திரைப்பட விமரிசனம் எழுதுபவனாக உள்ளே நுழைந்து, விரைவில் துணை ஆசிரியர் ஆனேன். அடுத்த எட்டாண்டுகள் கல்கி வாசம். நிறைய கற்கவும் எழுதவும் கல்கி எனக்கு மிகவும் உதவி செய்தது.
 
முதல் குறுநாவல் தொகுப்பு 'நிலா வேட்டை'யும், முதல் சிறுகதைத் தொகுப்பு 'மூவரு'ம் கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது வெளியாயின.
 
2000 ஆண்டு குமுதம் சென்றேன். ஓராண்டு குமுதம் ஆசிரியர் குழுவில் பணியாற்றியபின், 2001ல் தொடங்கப்பட்ட குமுதம் ஜங்ஷன் மாதமிருமுறை இதழின் பொறுப்பாசிரியர் ஆனேன். தமிழின் குறிப்பிடத்தகுந்த பத்திரிகை முயற்சிகளுள் ஒன்றாக இன்றளவும் நினைவுகூறப்படும் ஜங்ஷன், நவீன இலக்கியப் படைப்பாளிகளுக்கும் வெகுஜன வாசகர்களுக்கும் இடையிலான சரியான பாலமாக அமைந்தது.
 
துரதிருஷ்டவசமாக அடுத்த ஓராண்டுக்குள் அப்பத்திரிகை தன் முகத்தை மாற்றிக்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டதால், அன்புடன் விடைபெற்று வெளியேறி, மானசரோவர் என்கிற இணைய புத்தகத்தளத்தின் ஆசிரியர் பொறுப்பேற்றேன். 2003 டிசம்பரில் வெளியேறினேன்.
 
வசிப்பது, சென்னையை அடுத்த குரோம்பேட்டையில். பெற்றோர், மனைவி, மகள், இரண்டு தம்பிகள், அவர்களது மனைவி மக்கள் ஆகியோருடன் - கூட்டுக்குடித்தனவாசி.
 
வாழ்வது, New Horizon Media Private Limited நிறுவனத்தின் ஆசிரியராக.

 

 

 

award.jpg